திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் கடத்தப்பட்ட தரகர் கட்டி வைக்கப்பட்ட நிலையில் மீட்பு

திருவண்ணாமலையில் கத்தியால் வெட்டி கடத்தப்பட்ட இடைத்தரகர் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

Update: 2019-09-02 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை-செங்கம் சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. பொதுப் பணித்துறை அலுவலகம் அருகே ஆட்டோ சென்றபோது, அதில் இருந்து ஒருவர் திடீரென குதித்து ஓடினார். பின்னால் காரில் வந்த சிலர் அவரை துரத்திக்கொண்டு சென்றனர்.

பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்திற்குள் புகுந்த அவரை, துரத்தி சென்றவர்கள் கத்தியால் வெட்டி காரில் கடத்தி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் கொடுத்த காரின் எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த கார், தூசி அருகே உள்ள சுருட்டல் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். உரிமையாளரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் மோகன்ராஜ் (வயது 30) என்பவர் காரை வாங்கிச்சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த மோகன்ராஜ் தூசி போலீசில் சரண் அடைந்தார். பின்னர் அவரை, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோகன்ராஜின் தந்தை மணி, சேலத்தை சேர்ந்த இடைத்தரகரான கவுரிசங்கரிடம் ரூ.3½ லட்சம் கொடுத்து பொக்லைன் எந்திரம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். கவுரிசங்கர், பணத்தை பெற்றுக்கொண்டு பொக்லைன் எந்திரத்தை வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து மோகன்ராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி திருவண்ணாமலைக்கு கவுரி சங்கரை வரவழைத்து கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம், கடத்தி செல்லப்பட்ட கவுரிசங்கர் எங்கு உள்ளார் என்று கேட்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து மோகன்ராஜ் கூறிய இடத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு கட்டி வைத்திருந்த கவுரிசங்கரை மீட்டனர். அப்போது அவரது முகத்தில் வெட்டு காயம் இருந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனையடுத்து அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்