சதுர்த்தியையொட்டி 282 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தியையொட்டி கரூர் மாவட்டத்தில் 282 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2019-09-02 22:00 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 282 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. கரூர் சீனிவாசபுரத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு காலை 9 மணியளவில் பழம், பூ, கொழுக்கட்டை உள்ளிட்ட வற்றை படைத்து விநாயகர் துதி பாடல்களை பாடி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விநாயகர் சிலை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதேபோல, இந்து முன்னணி சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், லாலாபேட்டை, சின்னதாராபுரம், குளித்தலை உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மொத்தம் 282 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த சிலைகள் வாங்கல், நெரூர், குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள காவிரி ஆற்றிலும், சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றிலும் இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும்(புதன்கிழமை) போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி குளித்தலை சபாபதி நாடார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் முக்கிய இடங்களில் இந்து முன்னணி, பொதுமக்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு காலை, மாலை, இரவு ஆகிய 3 வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் அனைத்து விநாயகர் கோவில்களிலும் நேற்று காலை விநாயகருக்கு பால், பன்னீர், தேன், எண்ணெய், திரவிய பொடிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளித்தலை பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை(புதன்கிழமை) காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

நொய்யல் மற்றும் முத்தனூர், சேமங்கி, மரவாபாளையம், புன்னம்சத்திரம், பிரேம்நகர், முத்துநகர், புங்கோடை, குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம் காலனி, நொய்யல் அண்ணாநகர், சேமங்கி செல்வநகர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.நொய்யல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும், பரமத்தி, தென்னிலை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 19 விநாயகர் சிலைகளும், இன்று மாலை 6 மணிக்குமேல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

வேலாயுதம்பாளையம் பகுதியில் 22 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புகழிமலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகருக்கு நேற்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அதன் பின்னர் தேங்காய், பழங்கள் சுண்டல், பொரி, கடலை வைத்து சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

மேலும் செய்திகள்