காஞ்சீபுரத்தில் விநாயகருக்கு ரூ.10 லட்சம் நோட்டுகளாலான மாலை அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சீபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மாலையாக அலங்காரம் செய்யப்பட்டு சூடப்பட்டது.

Update: 2019-09-02 22:00 GMT
காஞ்சீபுரம், 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளாலான மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த வைபவத்தை காண ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு திரண்டு வந்து விநாயகப் பெருமானை தரிசித்து விட்டு சென்றனர்.

இதேபோல், விநாயகர் சதுர்த்தியையொட்டி காஞ்சீபுரம் சங்குபாணி விநாயகர் கோவில், ஏகாம்பரநாதர் விநாயகர் கோவில், ஓரிக்கை போலீஸ் குடியிருப்பு விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விநாயகர் பெருமானை பக்தர்கள் மனமுருகி தரிசித்து வழிபட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம், செய்யூர், சித்தாமூர், அச்சிறுபாக்கம், கடப்பாக்கம், மேல்மருவத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராம மற்றும் நகர்புரங்களில் உள்ள பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆங்காங்கே பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், கடப்பாக்கம் கூட்ரோடு கப்பி வாக்கம் விஜயநகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அச்சரப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற அச்சுமுறிவிநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, அச்சுமுறி விநாயகர், ஆட்சீஸ்வரர் சாமிகளுக்கும் காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடந்தது. அச்சரப்பாக்கம் புதுப்பேட்டையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கற்பக விநாயகர் விதிஉலா, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதேபோல் ஒரத்தி செல்வ விநாயகர் கோவில், காட்டு பிள்ளையார் கோவில் கிராமத்தில் உள்ள சுயம்பு விநாயகர் கோவில், கொங்கரை மாம்பட்டு சூரிய பிள்ளையார் கோவில்களில் விநாயகர் சதூர்த்தி திதி விழா சிறப்பாக நடந்தது

மேலும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் கோவில் முன்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காமதேனு வாகன விநாயகர் சிலையானது தனி மேடையில் அமைக்கப்பட்டது. அங்கு விநாயகருக்கு 25 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான லட்டுகள் படைக்கப்பட்டன. பள்ளிப்பட்டு மேற்கு தெரு, பஜார் தெரு, சோளிங்கர் ரோடு, ராதா நகர் உள்பட பல இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திலும் 55-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், ஒண்டிகுப்பம், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, புட்லூர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், கசவ் நல்லாத்தூர், பேரம்பாக்கம், கூவம் குமாரச்சேரி, இருளஞ்சேரி, பண்ணூர் என சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல இடங்களில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்