குஜிலியம்பாறை அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

குஜிலியம்பாறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-03 22:30 GMT
குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே உள்ள கோட்டாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தகதிர்பாளையம் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்துளை கிணறு வறண்டு விட்டது.

இதன்காரணமாக வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. மேலும் குடிநீர் வினியோகம் செய்ய ஆபரேட்டர் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிலர், குடிநீரை விவசாய நிலத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, வசந்தகதிர்பாளையத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தநிலையில் கிராம மக்கள், கோட்டாநத்தத்தில் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர் கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் தங்களது கிராமத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முத்துகுமரன் மற்றும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வசந்தகதிர்பாளையத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்