இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விசை, நாட்டுப்படகு மீனவர்கள் 8 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2019-09-03 22:30 GMT
கோட்டைப்பட்டினம்,

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியை சேர்ந்தவர் தொண்டிமுத்து. இவரது மகன் தொண்டீஸ்வரன் (வயது 25). இவர் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செம்புமகாதேவிபட்டினம் பகுதியில் தங்கி நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி செம்புமகாதேவிபட்டினத்திலிருந்து, தொண்டீஸ்வரன் தனது நாட்டுப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இதில் தொண்டீஸ்வரனுடன் நம்புதாளை பகுதியை சேர்ந்த தூண்டி மகன் முத்துமாரி (30), லட்சுமண் மகன் தனிக்கொடி (35), காத்தமுத்து மகன் ராமலிங்கம் (42) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து, நாட்டுப்படகினையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கடந்த மாதம் 19-ந்தேதி கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ஜெயகுமார் மகன் மணிகண்டன் (31), அதே ஊரை சேர்ந்த சுந்தரம் மகன் பாலகிருஷ்ணன் (47), கருப்பையா மகன் கார்த்திக் (22), முனியசாமி மகன் சதிஷ் (21) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்து, விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் இனி வரும் காலங்களில் இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து 8 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் விசை, நாட்டுப்படகுகளை பெற நவம்பர் 1-ந் தேதி படகு உரிமையாளர்கள் இந்த நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜர் ஆக வேண்டும். இல்லையென்றால் படகுகள் அரசுடமையாக்கப்படும் என்றும் கூறினார். விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் அடுத்த வாரம் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்