கடந்த 5 நாட்களில் ஹெல்மெட் அணியாத 11,052 பேர் மீது வழக்கு

வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய மற்றும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து சென்ற 11 ஆயிரத்து 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-09-03 22:00 GMT
வேலூர், 

மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம்  ஹெல்மெட்  அணிய வேண்டும். அதேபோன்று கார் ஓட்டுபவர்கள்  சீட் பெல்ட்  அணிய வேண்டும். ஹெல்மெட்  மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் மீதும், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

வேலூர் மாவட்டத்தில் இந்த நடைமுறைகள் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் மற்றும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது  ஹெல்மெட்  அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவற்றின் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் மீதும்,  சீட் பெல்ட்  அணியாமல் கார் ஓட்டுபவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்கிறார்கள்.

அதன்படி கடந்த 29-ந் தேதி 1,069 பேர் மீதும், 30-ந் தேதி 3,265 பேர் மீதும், 31-ந் தேதி 3,474 பேர் மீதும், 1-ந் தேதி 2,263 பேர் மீதும், 2-ந் தேதி 981 பேர் மீதும் என 5 நாட்களில் ஹெல்மெட்  அணியாத 11 ஆயிரத்து 52 பேர் மீது வழக்குப்பதிந்து ரூ.11 லட்சத்து 5 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 5 நாட்களில்  சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 1,217 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம்  இ-சலான்  முறையில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 40  இ-சலான்  கருவி மூலம் உடனடியாக அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. அப்போது அபராத தொகை செலுத்தாதவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, வங்கிகளில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 21-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 488 பேர் மீது வழக்குப்பதிந்து ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்