நாட்டு வெடிகுண்டு வீச்சில் தப்பிய பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை - 4 பேர் சரண்

நாட்டுவெடிகுண்டு வீச்சில் தப்பிய பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் 4 பேர் சரண் அடைந்தனர்.

Update: 2019-09-03 23:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற சாணிக்குமார் (வயது 45). பிரபல ரவுடியான இவர் கடந்த 1998ம் ஆண்டு தட்டுவண்டி தொழிலாளி ராஜகோபால் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்டனை முடிவடைந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் தீவிர ஆஞ்சநேயர் பக்தராக மாறினார். தனது வீட்டின் அருகே சிறிய அளவில் ஆஞ்சநேயர் கோவில் கட்டினார்.

இந்த நிலையில் எதிரிகளால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து அவர் ஊருக்குள் வராமல் தமிழக பகுதியில் தங்கி இருந்தார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வார். இவர் மீது முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வீசியது, முன்னாள் அமைச்சர் ராஜவேலுவின் அண்ணன் வீட்டில் வெடிகுண்டு வீசியது, நீதிபதியை அவமானப்படுத்தியது, சிறையிலேயே மர்டர் மணிகண்டனை கல்லை கூர்மையாக்கி கொலை செய்ய முயற்சி செய்தது, வாணரப்பேட்டை கந்தனை கொலை செய்ய முயற்சி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியின் உபயதாரராக சாணிக்குமார் இருந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை எல்லாமல் அவர் தனது ஆதரவாளர்களுடன் முன்னின்று கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கோவில் திருவிழா நடந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே நின்று கொண்டு இருந்தனர். இதில் 3 பேர் முகத்தில் முகமூடி அணிந்தபடி கோவிலின் அருகே சென்றனர்.

அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த சாணிக்குமாரை நோக்கி நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசினர். அப்போது வெடிகுண்டு குறிதவறி சாணிக்குமார் மீது படாமல், கோவில் சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த மர்ம கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சாணிக்குமாரிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் கோவில் விழா முடிவடைந்த பின்னர் நள்ளிரவில் சாணிக்குமார் தனது வீட்டிற்கு சென்றார். அவர் கோவிலை விட்டு சிறிது தூரம் நடந்து சென்ற போது மர்ம கும்பல் அவரை பின்தொடர்ந்து சென்றது. ஏதே விபரீதம் நடக்க போகிறது என்று அறிந்த சாணிக்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று ஒரு நாட்டு வெடிகுண்டை மீண்டும் அவர் மீது வீசியது. அந்த குண்டு வெடிக்காமல் அருகில் உள்ள சாக்கடையில் விழுந்தது.

அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று அப்துல் கலாம் நகர் பகுதியில் அவரை சுற்றி வளைத்தது. கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கியது. இதில் சாணிக்குமாரின் தலை, கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. தலை முழுவதுமாக சிதைந்தது. அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் அந்த கும்பல் ஆயுதங்களை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி விட்டனர். நள்ளிரவு கொலை நடந்தால் அந்த பகுதியை சேர்ந்த யாருக்கும் இது உடனடியாக தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதி மக்கள் சாணிக்குமார் கொலை செய்யப்பட்டு ரோட்டோரம் பிணமாக கிடந்ததை பார்த்தனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கொலையாளிகள் பயன்படுத்தி கத்தி, அரிவாள் போன்றவை அங்கு சிதறி கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து கொளத்தார் தோப்பு, ஜெயமுத்துமாரியம்மன் கோவில் வழியாக அன்னை இந்திரா நகர் முதல் குறுக்குத்தெரு வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் ரவுடி சாணிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாணிக்குமாரை கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், சாணிக்குமாருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாணிக்குமார் மீது லேசாக மோட்டார் சைக்கிள் உரசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சாணிக்குமார் அந்த வாலிபரிடம் நான் யார் தெரியுமா? என்னிடமே மோதுகிறாயா? உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சாணிக்குமார் தன்னை கொலை செய்வதற்கு முன்பு அவரை கொலை செய்ய வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை செய்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக நேற்று காலை 4 பேர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபருடன் ஏற்பட்ட தகராறில் தான் சாணிக்குமார் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாணரப்பேட்டை கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு சாணிக்குமார் கலந்து கொள்வதை அறிந்த மர்ம கும்பல் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நாட்டு வெடிகுண்டுகளுடன் அங்கு வந்துள்ளது. அந்த கும்பல் சாணிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. அந்த குண்டு அவர் மீது படாததால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். இது குறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த 1 மணி நேரம் ஆகியும் போலீஸ் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. 5 போலீஸ்காரர்கள் மட்டுமே அங்கு வந்தனர். அவர்களும் சம்பவம் நடந்த இடத்தை மட்டும் பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். முதலியார்பேட்டை போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி ரோந்து பணி மேற்கொண்டு இருந்தால் கொலை நடைபெறாமல் தடுத்திருக்கலாம். போலீசாரின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்ததுள்ளது என்று அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் செய்திகள்