குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை; பாகமண்டலா வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது

குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பாகமண்டலா வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

Update: 2019-09-04 23:00 GMT
குடகு, 

குடகு மாவட்டத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி, லட்சுமணதீர்த்தா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் ஆற்றங்கரையோர கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மழை-வெள்ளத்தால் சுமார் 5 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது தான் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் 2-வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை தாலுகாக்களில் காலை முதல் மாலை வரை கனமழை பெய்தது. இதனால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகமண்டலாவில் உள்ள பங்கண்டேஸ்வரா கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாகமண்டலாவில் முக்கிய சாலைகளை மூழ்கடித்தப்படி வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் அந்தப் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதற்கிடையே குடகு மாவட்டத்தில் 204.5 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே இன்று (வியாழக்கிழமை) குடகு மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வனப்பகுதி, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் உடனே பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்