விருதுநகர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது; 2 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே நந்திரெட்டியப்பட்டியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த போது திடீரென வெடித்ததால் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-04 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே நந்திரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் போதுராஜ்(வயது 50). விவசாயியான இவர் காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமான ஆட்டு தொழுவத்தில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் இவரது நண்பர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த பழனி என்பவருடன் ஈடுபட்டிருந்தார்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்தபோது வெப்பம் காரணமாக வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் பழனிக்கு 2 கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. போதுராஜுக்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

தகவல் அறிந்த ஆமத்தூர் போலீசார் இருவரையும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பழனி தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக மாவட்டத்தின் மேற்கு பகுதியில் தான் திருட்டுத்தனமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது நடந்து வந்தது. ஆனால் விருதுநகரை ஒட்டியுள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது. பொதுவாக கண்காணிப்பு குறைபாடே இந்த மாதிரியான குற்றவியல் செயல்களை செய்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் செய்திகள்