அரியாற்றில், அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிராக்டர்கள் பறிமுதல் - டிரைவர் கைது

அரியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-04 22:00 GMT
சோமரசம்பேட்டை,

திருச்சியை அடுத்த ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக திருச்சி மாவட்ட சிறப்பு மணல் கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று காலை மணல் கடத்தல் தடுப்பு அதிரடிப் படையினர் அரியாவூரில் உள்ள அரியாற்றுப் பகுதிக்கு சென்றனர்.

அப்போது ஆற்றின் உள்ளே 3 டிராக்டர்களில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். ஆனால், டிராக்டர் டிரைவர்களான சதீஸ்குமார், செல்வக்குமார் ஆகியோர் டிராக்டர்களை விட்டு ஓடிவிட்டனர்.

மற்றொரு டிராக்டர் டிரைவரான முருகேசன் மட்டும் பிடிப்பட்டார். மணல் கடத்தல் தடுப்பு பிரிவினர் டிராக்டர்களை பறிமுதல் செய்ததுடன் டிரைவர் முருகேசனையும் ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்