காட்டுமன்னார்கோவிலில், ஓடும் பஸ்சில் தலைமை ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம், செல்போன் அபேஸ்

காட்டுமன்னார்கோவிலில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தலைமை ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-09-05 22:45 GMT
காட்டுமன்னார்கோவில்,

ஸ்ரீமுஷ்ணம் கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் முத்துக் கருப்பன். இவருடைய மனைவி சாந்தி(வயது 51). இவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலராதாம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நிதி இல்லாததால் கட்டிடப் பணி பாதியில் நிற்கிறது. எனவே சாந்தி, தனது சொந்த பணத்தை கட்டிடப் பணிக்கு கொடுக்க முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் மதியம் அவர் காட்டுமன்னார்கோவிலுக்கு சென்றார். அங்குள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்து தனது கைப்பையில் வைத்துக் கொண்டார்.

பின்னர் ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அந்த சமயத்தில் வந்த ஒரு பஸ்சில் பயணிகள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பஸ்சுக்காக வெகுநேரம் காத்திருந்த சாந்தியும் கூட்ட நெரிசலைப்பற்றி பொருட்படுத்தாமல் அந்த பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கண்டக்டர், பயணிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, டிக்கெட் கொடுத்தார். உடனே சாந்தி, டிக்கெட் எடுப்பதற்காக பணம் கொடுக்க பையை பார்த்தார். அப்போது அவரது பை திறந்திருந்தது. பையில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது பையில் இருந்த பணம் மற்றும் செல்போனை மர்மநபர் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

இதுகுறித்து சாந்தி, காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, அந்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்