தாளவாடி அருகே விநாயகர்சிலையை கரைத்து திரும்பியபோது தகராறு நடனமாடியதை தட்டிக்கேட்ட தாய்-மகன் மீது தாக்குதல்

தாளவாடி அருகே விநாயகர் சிலையை கரைத்து திரும்பியபோது நடனமாடியதை தட்டிக்கேட்ட தாய், மகனை குடிபோதையில் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-05 22:15 GMT
தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகினாரை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடந்து வந்தது. இந்த சிலைகளை நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள குளத்தில் கரைத்தனர்.

இதில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். சிலைகளை கரைத்தபின்னர் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் ரோட்டில் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து திகினாரையை சேர்ந்த கரியப்பா (வயது 48), நாகராஜ் (50) ஆகிய 2 பேரும் சேர்ந்து நடனமாடியுள்ளார்கள்.

இதைப்பார்த்த அதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் (29) கரியப்பாவையும், நாகராஜையும் பார்த்து, ‘ஏன் சிறுவர்களுடன் சேர்ந்து நடனமாடுகிறீர்கள்?’ என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 2 பேரும் தகாத வார்த்தையால் சிவக்குமாரை திட்டியுள்ளனர். மேலும் அவரை தாக்கி முதுகில் கடித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே சத்தம் கேட்டு சிவக்குமாரின் தாய் மாதேவி அங்கு வந்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரையும் 2 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளார்கள். இதில் மாதேவியும், சிவக்குமாரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கரியப்பாவும், நாகராஜும் குடிபோதையில் தாய், மகனை தாக்கியது தெரிய வந்தது. இதையொட்டி 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்