ஓமலூர் அருகே போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்

ஓமலூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-05 22:00 GMT
ஓமலூர், 

ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிபட்டி பிரிவு ரோடு, பல்பாக்கி பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் ஓமலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், மல்லிகா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இந்தநிலையில் பல்பாக்கி பிரிவு பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் முன்னால் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் 2 பேரும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிண்டமங்கலம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 40) மற்றும் ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த சேகர் (55) என தெரியவந்தது. கீழே விழுந்ததில் ஏழுமலைக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து ஏழுமலை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சேகருக்கு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தக்கூடாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலின்பேரில் ஓமலூர் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஓமலூர்- தர்மபுரி மெயின்ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்