வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-06 22:30 GMT
வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள வரப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராமத்தின் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் திடீரென பழுதானது.

எனவே கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் தண்ணீர் கிடைக் காமல் பெரிதும் சிரமப்பட்டு வரு கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள், ஈ.சித்தூர் ஊராட்சியிலும், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வரப்பட்டியில் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து பழுதான மின்மோட்டாரை சரிசெய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்