குறைந்த விலைக்கு வாஷிங்மிஷின் வாங்கித்தருவதாக மோசடி: ரூ.21 ஆயிரத்துடன் தலைமறைவானவரால் பரபரப்பு

காணிப்பாக்கத்தை சேர்ந்த வாலிபருக்கு குறைந்த விலையில் வாஷிங்மிஷின் வாங்கித்தருவதாகக்கூறி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ரூ.21 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-06 22:15 GMT
வேலூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தரணிபிரசாத் (வயது 27). மருந்துக் கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர் வேலைபார்க்கும் கடைக்கு ஒருவர் அடிக்கடி வந்து மாத்திரை வாங்கிச்சென்றுள்ளார். இதனால் அவருக்கும் தரணிபிரசாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூரில் தனக்கு தெரிந்த ஒருவர் வாஷிங்மிஷின் உள்பட வீட்டுஉபயோகப் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அதில், தரணிபிரசாத்துக்கு பொருட்கள் வாங்கித்தருவதாகவும் கூறியிருக்கிறார். அப்போது ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள வாஷிங் மிஷினை ரூ.21 ஆயிரத்துக்கு வாங்கித்தருவதாக கூறியிருக்கிறார்.

இதை நம்பிய தரணிபிரசாத் நேற்று அந்தநபருடன் வேலூருக்கு வந்துள்ளார். அவரிடம் ரூ.21 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, அவரை வேலூர் கலெக்டர் அலுவலக கேட் அருகில் நிற்கவைத்துள்ளார். மேலும் பொருட்கள் விற்கும் நபர் கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதாகவும், அவரை பார்த்துபேசிவிட்டு வந்து அழைத்துச்செல்வதாகவும் கூறிவிட்டு அந்த நபர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றுள்ளார்.

நீண்டநேரமாகியும் அவர் திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தரணிபிரசாத் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று அவரை தேடிப்பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. அவர் ரூ.21 ஆயிரத்துடன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தரணிபிரசாத் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரைபெறாமல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்தவாசியை சேர்ந்த 2வாலிபர்களுக்கு அரசுவேலை வாங்கித்தருவதாக ஒருவர் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு போலி பணியாணையும் கொடுத்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சிக்கு வரவைத்து மோசடி செய்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். அப்போதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் 24 மணிநேரமும் போலீசார் இருந்தும் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்போது மோசடிபேர்வழிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மோசடி செய்து பிடிபடுபவர்கள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல், கீழ்மட்டத்தில் உள்ளவர்களே பேசி அனுப்பி விடுவதால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்