காரிமங்கலம் அருகே, சென்னகேசவ பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு

காரிமங்கலம் அருகே சென்னகேசவ பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-06 22:30 GMT
காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கோவிலூர் ஊராட்சியில் பழமை வாய்ந்த சென்னகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோபால் என்பவர் அறங்காவலராகவும், நரசிம்மன் பூசாரியாகவும் இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் பூசாரி பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே நேற்று காலை கோவில் பூசாரி நரசிம்மன் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார்.

அப்போது நுழைவுவாயில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து அறங்காவலர் கோபாலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர் ஊர் பொதுமக்களுடன் கோவில் வளாகத்திற்கு வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது. அதனால் பொதுமக்கள் கோவிலை சுற்றி உண்டியலை தேடினர்.

இந்த கோவிலின் பின் பக்கம் சுடுகாட்டில் உண்டியல் உடைக்கப்பட்டும், அதில் இருந்த பணம், நகை திருடப்பட்டு திறந்தும் கிடந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அங்கு இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து சென்று நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சென்னகேசவ பெருமாள் கோவிலில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்