“தமிழ் மொழியை தி.மு.க. அரசியலுக்கு பயன்படுத்துகிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

“தமிழ் மொழியை தி.மு.க. அரசியலுக்கு பயன்படுத்துகிறது“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

Update: 2019-09-07 22:30 GMT
கயத்தாறு,

கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். பின்னர் அவர், வில்லிசேரியில் தமிழக அரசின் ஊருக்கு நூறு கை திட்டத்தில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், யூனியன் ஆணையாளர்கள் முத்துகுமார், சீனிவாசன், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், அ.தி.மு.க. நகர செயலாளர் கப்பல் ராமசாமி, ஒன்றிய செயலாளர் வினோபாஜி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கயத்தாறில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கயத்தாறு யூனியனில் 55 இடங்களில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தில் குளம், கண்மாய்கள் தூர்வாரப்படுகிறது. குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை மூலம் பெறப்படும் நீரை முழுமையாக சேகரிக்கும் வகையில், அனைத்து நீராதாரங்களும் மேம்படுத்தப்படுகிறது.

சினிமா தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக, சென்னையில் எனது தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் திரைப்படத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக நல்ல ஆரோக்கியமான வழிகாட்டுதல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது, திரைப்படத்துறையை மேம்படுத்தும் என்று தெரிவித்தனர். இது சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும், நாட்டுக்கே முன்னோடியாகவும் அமையும்.

இன்னும் ஒரு வாரத்துக்குள் மீண்டும் அதேபோன்று ஒரு கூட்டம் நடத்தப்படும். அதற்குள்ளாக திரைப்பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்குள்ளாக ஆலோசனை கூட்டம் நடத்தி, நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறினர். அப்போது நல்ல முடிவு எட்டப்படும். அதில் நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம்பெறும்.

தபால் துறையில் தேர்வுகளை தமிழில் எழுத வைத்து, தாய் மொழியை காக்கும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. ரெயில்வே தேர்வுகளும் தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் பெறலாம் என்ற உத்தரவை பெற்று தந்ததும் அ.தி.மு.க அரசுதான். தமிழ் வளர்ச்சி துறையை தொடங்கி, ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து, அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரை பங்கேற்க செய்து பெருமை சேர்த்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அனைத்திலும் தமிழ் முதன்மையானதாக பாதுகாக்கப்படும். ஆனால் தி.மு.க.வினர் தங்களது ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழிக்கு எதுவுமே செய்யாமல், அதனை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.15 கோடி செலவில் புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சி.டி.ஸ்கேன் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக கதிரியக்க நிபுணர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்