அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடி உடைப்பு: 3 வாலிபர்களுக்கு தலா ஒரு ஆண்டு சிறை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-09-07 22:15 GMT
நெல்லை,

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி இரவு ஊட்டிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பஸ்சை ஓட்டினார். பரமசிவன் என்பவர் கண்டக்டராக பணியாற்றினார்.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வந்த போது, ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டும் என்று கூறி 3 பேர் பஸ்சில் ஏற முயன்றனர். பஸ்சில் உட்காருவதற்கு சீட் இல்லை. அடுத்த பஸ்சில் வரும்படி கண்டக்டர் பரமசிவன் கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் பஸ் அங்கு இருந்து புறப்பட்டு சென்றது.

தச்சநல்லூர் விலக்கு அருகே பஸ் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு மீண்டும் தகராறில் ஈடுபடச் சென்றனர்.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அரசு பஸ்சை வழிமறித்தல், ஆபாசமாக பேசுதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டையை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த கண்ணன் என்ற முருகன் (வயது 31), செல்வக்குமார் (23), மணிகண்டன் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்