தார்வார் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு, கர்நாடக அரசு உத்தரவு

தார்வாரில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-09-07 23:27 GMT
பெங்களூரு, 

தார்வார் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் யோகேஷ் கவுடா. இவர், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது யோகேஷ் கவுடா கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாக யோகேஷ் கவுடாவை கொலை செய்ததாக 5 பேரும் கூறினார்கள். பின்னர் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 5 பேரும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

ஆனால் யோகேஷ் கவுடா அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த கொலையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறினார்கள். மேலும் யோகேஷ் கவுடா கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, 3 ஆண்டுக்கு முன்பு பா.ஜனதாவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மேலும் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, யோகேஷ் கவுடா கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுத்து விட்டார்.

இந்த நிலையில், யோகேஷ் கவுடா கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுக்கு பின்பு, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த கர்நாடக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. யோகேஷ் கவுடா பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பதாலும், அரசியல் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதாலும், இந்த கொலையில் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுவதாலும் சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சிவாஜிநகரில் உள்ள நகைக்கடை அதிபர் மன்சூர்கான், பொதுமக்களிடம் ரூ.1640 கோடி மோசடி செய்த வழக்கையும், கூட்டணி ஆட்சியில் நடந்த தொலைபேசி ஒட்டுகேட்பையும் சி.பி.ஐ. வசம் கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது. கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து 1 மாதங்கள் ஆகிறது. அதற்குள் 3 வழக்குகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்