பண்ருட்டி அருகே, விவசாயியை கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

பண்ருட்டி அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-08 22:00 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள அழகப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசோகன்(54) என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அசோகன், பிரச்சினைக்குரிய நிலத்தில் உள்ள வரப்பில் இருந்த கல்லை அகற்றினார்.

இதுபற்றி அறிந்த சுப்பிரமணியன் நேற்று முன்தினம் அசோகனிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அசோகன், கத்தியால் சுப்பிரமணியனின் தலையில் வெட்டினார். மேலும் அசோகனின் மனைவி செந்தமிழ்செல்வி, மகன் மருதுபாண்டி ஆகியோரும் அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அசோகன், செந் தமிழ்செல்வி, மருதுபாண்டி ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த அசோகன் உள்ளிட்ட 3 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்