பெசன்ட்நகர் ஆலய திருவிழாவின் போது கடற்கரையில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை - குடும்பத்தினர் கண்முன்னே பயங்கரம்

சென்னை பெசன்ட்நகரில் நடைபெற்றுவந்த ஆலய திருவிழாவின் போது, கடற்கரையில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். குடும்பத்தினரின் கண்முன்னே அவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2019-09-08 23:00 GMT
அடையாறு,

சென்னை செனாய் நகர் டி.பி.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மில்லர் ராஜ். இவரது மகன் பென்னிராஜ் (வயது 19). இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் பென்னிராஜ் நேற்று முன்தினம் மாலை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழாவில் தனது தாய், சகோதரர் மற்றும் 2 நண்பர்களுடன் வந்து கலந்து கொண்டார்.

நள்ளிரவில் பெசன்ட்நகர் கடற்கரையில் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார், அப்போது அங்கு 7 வாலிபர்கள் கொண்ட கும்பல் பென்னிராஜிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், அந்த கும்பல் தாங்கள் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து பென்னிராஜின் வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பென்னிராஜின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பென்னிராஜை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாஸ்திரி நகர் போலீசார் பென்னிராஜின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை தொடர்பாக தரமணியை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்