திண்டிவனம் அருகே, மேளக்காரர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே மேளக்காரர் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-08 22:15 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வசித்து வருபவர் கருணாகரன்(வயது 50). மேளக்காரர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி லட்சுமி, மகன்கள் குணசேகரன், ஆனந்தன் ஆகியோருடன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் அம்மனை தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்கக்கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கருணாகரன் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோவில் குணசேகரன் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.4 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிந்தது.

இதனால் பதறிய கருணாகரன் இதுபற்றி மயிலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கருணாகரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து, படுக்கை அறையில் இருந்த பீரோ பூட்டையும் உடைத்து, அதில் வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்