ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-09-08 22:00 GMT
நாகர்கோவில்,

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள டதி பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் செல்வ நாயகம் வரவேற்றார். பொருளாளர் நடராசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முதன்மை கல்வி அதிகாரி ராமன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார். சிறப்பு தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பெனின் தேவகுமார், சேம் பிரின்ஸ்குமார் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், ஜாக்டோ- ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தண்டனையை ரத்து செய்வதோடு பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து வழங்க வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வானது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசு விதிகளை மீறி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் சென்றவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கூடாது.

நிர்வாக காரணங்களால் எப்போது வேண்டுமானாலும் உரிய அலுவலர்களால் மாறுதல் வழங்கப்பட வேண்டும் என்ற விதியை ரத்து செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. முடிவில் துணை தலைவர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்