பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள் - எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனர். இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2019-09-08 22:00 GMT
பரமத்திவேலூர்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இதையொட்டி அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இங்கிருந்து பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 46 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் சுற்றுலா வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக காவிரி ஆற்றில் குளிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்யப் பட்டது.

இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஒருவர், காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இவரை கடந்த 3 நாட்களாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று ஆபத்தை உணராமல் உள்ளூர்பகுதி மக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் பாதுகாப்பாக குளிக்கவும், ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை காவிரி ஆற்றில் குளிப்பாட்ட வேண்டாம் எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என பரமத்திவேலூர் தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. எனவே இனிமேலாவது காவிரி ஆற்றில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வருவாய்த்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை பலகைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்