வேலூரில் ரூ.3 லட்சம் கேட்டு மோட்டார்சைக்கிள் ஷோரூம் உரிமையாளருக்கு மிரட்டல் - மர்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூரில் ரூ.3 லட்சம் கேட்டு மோட்டார்சைக்கிள் ஷோரூம் உரிமையாளரை மிரட்டிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-09-08 22:00 GMT
வேலூர், 

வேலூர் தோட்டபாளையம் அருகந்தம்பூண்டி பெரியதெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 33). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேலூர்- சத்துவாச்சாரி செல்லும் சர்வீஸ் சாலையில் நவீன ரக மோட்டார்சைக்கிள் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மகும்பல் ரூ.3 லட்சம் பணம் உடனடியாக தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து அழைப்பை துண்டித்து விட்டனர்.

இதுகுறித்து சுதர்சன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணையில், சுதர்சனை, ஆன்லைன் எண் மூலமாக மர்மநபர்கள் தொடர்பு கொண்டு பேசியது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்மூலம் போலீசார் விசாரணை நடத்தி, மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த மாணவர் ஒருவர் ரூ.3 கோடிக்காக கடத்தப்பட்டார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டார். இந்த நிலையில் மோட்டார்சைக்கிள் ஷோரூம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மர்மகும்பல் மிரட்டிய சம்பவம் தொழிலதிபர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்