மதுரையில் பரபரப்பு: ரவுடிகளை பிடிக்க துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்

மதுரையில் ரவுடிகளை பிடிப்பதற்காக வானத்தை நோக்கி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-08 23:15 GMT
மதுரை,

மதுரை காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு, தெப்பக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சிவராமகிருஷ்ணன், போலீஸ்காரர் அன்பு ஆகிய 3 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் தூமாட்டி ரெங்கசாமி சந்து பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, ஒரு ஆட்டோவில் வைத்து சிலர் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த போலீசார், அவர்களை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு செயல்பட தொடங்கினர். நிலைமை மோசமானதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அனைவரும் சரண் அடைந்து விடுமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் ஒருவர் மட்டும் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார். அங்கிருந்த மற்ற 5 பேரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசார் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அனைவரும் தூமாட்டி ரெங்கசாமி தெருவை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெயர்கள் செல்வம் மகன் மணிகண்டன் (வயது22), பாலசுப்பிரமணியம் மகன் சிவபிரகாஷ் (20), மணிகண்டன் மகன் கார்த்திக் (21), பாண்டி மகன் ரமேஷ் (41), அருள்பூபதி மகன் ராஜகணேஷ் (28) என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி சென்றவர் பழனிபாரதி என்பதும் தெரிந்தது.

அதில் ராஜகணேஷ் மீது கொலை-கொள்ளை வழக்குகள் அதிக அளவில் இருப்பதும், அவர் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் தெரிந்தது.

மற்றவர்கள் மீதும் வழக்குகள் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றி இருப்பதாகவும், 5 பேரை கைது செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி சென்ற பழனிபாரதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்