மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-09 23:15 GMT
மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர்வரத்து காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கடந்த 7-ந்தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்யும் மழையின் அளவு குறைந்துள்ளது. எனவே அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இந்த நீர்வரத்தானது வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறையுமானால் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்படும்.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்தநிலையில் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 120.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 66 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 70 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை நிரம்பியதை அறிந்ததும் விடுமுறை தினமான நேற்று முன்தினம் மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குவிந்தனர். இவர்கள் தங்கமாபுரி பட்டணம் புதுப்பாலம் பகுதியில் நின்று 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவதை பார்த்து ரசித்தனர்.

இதேபோல் மேட்டூர் பூங்கா, அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் அளந்து கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 33-வது நாளாக நீடித்தது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 5-வது நாளாக நீடித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த போதிலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் நுழைவுவாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்