ஏரிக்கரையை உடைத்து பாதை அமைத்ததற்கு கண்டனம் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

ஏரிக்கரையை உடைத்து பாதை அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Update: 2019-09-10 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. இதன் அருகில் பட்டரை கிராமத்திற்கான 32 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன் மூலம் 500 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பயன் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த பட்டரை ஏரியில் தண்ணீர் தேங்கி வருகிறது. ஆனால் அந்த தனியார் நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்களை பட்டரை கிராமப்பகுதி வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த நிறுவனத்தினர் பட்டரை பகுதியில் உள்ள ஏரிக்கரையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இதை அறிந்த மேல்நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து ஏரியில் பாதை அமைப்பதை கண்டித்து திரளானவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பொக்லைன் எந்திர டிரைவர் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகி ஒருவரை கைது செய்தனர். கைது செய்த இருவரையும் போலீசார் உடனடியாக ஜாமீனில் வெளியே விட்டனர். இதை அறிந்து ஆத்திரம் அடைந்த மேல்நல்லாத்தூர் மற்றும் பட்டரை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பட்டரை ஏரிக்கரையை உடைத்து பாதை அமைத்ததை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை தண்டனை வழங்காமல் விடுவித்ததை கண்டித்தும் கையில் தீப்பந்ததத்தை ஏந்தி ஏரியில் அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்