குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-09-10 22:15 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பாரதிநகரில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முத்தாலம்மன்கோவில் அருகேயும், விநாயகர் கோவில் தெருவிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு 4 சிறிய குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் மனுவை வாங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மனு கொடுக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்