ஜெயங்கொண்டம், மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஜெயங்கொண்டம் (வடக்கு) மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-10 22:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமம் வடக்கு தெருவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களை இயக்குவதற்காக முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும் விதவைகள் சிறப்பு முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்க கடந்த மாதம் 28-ந் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரு பொதுப்பாதையில் மின்கம்பங்கள் நடும் பணியில் பணியார்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உயர் மின்னழுத்தம் மின்கம்பிகள் தெருக்களின் வழியாக சென்றால் உயிர்பலி ஏற்படும். எனவே இந்த பொதுப்பாதை வழியாக மின் கம்பம் அமைக்கக்கூடாது என தெரிவித்தனர்.முன்னதாக இப்பகுதியில் ஏற்கனவே உள்ள உயர் மின்னழுத்தக்கம்பி அறுந்து விழுந்து உயிர்பலி ஏற்பட்டுள்ளதால், இங்கு மின்கம்பங்கள் நடக் கூடாது என பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மின்கம்பம் நட பணியாளர்கள் சென்றபோது அவர்களை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜெயங்கொண்டம் (வடக்கு) மின்சார வாரிய அலுவலத்திற்கு பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சென்று, அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உயரழுத்த மின் கம்பிகளை கொண்டு செல்ல மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், உதவி செயற்பொறியாளர் சாமிதுரை, உதவி மின்பொறியாளர்கள் ரம்யா, சிலம்பரசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்சாரம் கொண்டு செல்லும் இடத்தை பார்வையிட்டு சுமுக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மின்சார அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்