ஈரோடு மாநகராட்சியில் மாநில தேர்தல் ஆணையாளர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சியில் மாநில தேர்தல் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2019-09-10 23:00 GMT
ஈரோடு, 

தமிழகத்தில் உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டுடன் நிறைவு பெற்றது. அதன்பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் பழனிசாமி ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவர் அனைத்து அதிகாரிகளுடன் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையாளர் பழனிசாமி நேற்று காலை ஆய்வு நடத்தினார். அப்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விண்ணப்பங்கள், புதிய வரைவு வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பிறகு ஈரோடு ரெயில்வே காலனி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அவர் ஆய்வு செய்தார்.

வாக்காளர் பட்டியல்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும், இறந்து போனவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையாளர் பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், புதிய வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், குடிநீர், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்