சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு அடி-உதை ; கம்பத்தில் கட்டி வைத்தனர்

சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்து அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2019-09-10 22:30 GMT
பனப்பாக்கம்,

பாணாவரத்தில் உள்ள சோளிங்கபுரம் ரெயில் நிலைய பகுதியில் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சொலகொளராம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, ரெயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் பணி முடிந்து இரவில் ரெயில் நிலைய வளாகத்தில் அவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் வாலாஜா இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தினேஷ் (வயது 29) என்பவர் ரெயில் நிலைய வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த துர்காபிரசாத் (22) என்பவரின் மனைவி பார்வதி அருகில் தூங்கி கொண்டிருந்த அவர்களின் ஒரு வயது பெண் குழந்தை ரிஷிகவந்தாவை யாருக்கும் தெரியாமல் தூக்கி உள்ளார்.

அப்போது திடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தை அலறி அழ தொடங்கியது. குழந்தையின் அழுகுரல் கேட்ட அவரது பெற்றோர் எழுந்து பார்த்தனர். உடனடியாக தினேஷ் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை கடத்த வந்த தினேசை விரட்டி சென்றனர். அப்போது இவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தினேஷ் அங்குள்ள முட்புதரில் மறைந்து கொண்டார்.

பின்னர் தினேசை தொழிலாளர்கள் பிடித்து ரெயில் நிலையத்தில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் தினேசை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ரெயில் நிலைய போலீசார் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு காட்பாடி போலீசார் விரைந்து வந்து தினேசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்