இமயமலையில் இருந்து வால்பாறைக்கு வந்த வாலாட்டி குருவிகள் மாணவ-மாணவிகள் உற்சாகம்

இமயமலையில் இருந்து வால்பாறைக்கு சாம்பல் வாலாட்டிகுருவிகள் வந்துள்ளன. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்து கொண்டாடினர்.

Update: 2019-09-10 22:30 GMT
வால்பாறை,

இமயமலையில் இருந்து வால்பாறைக்கு சாம்பல் வாலாட்டிகுருவிகள் வந்துள்ளன. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்து கொண்டாடினர்.

வால்பாறைக்கு வந்த வாலாட்டி பறவைகள்

வால்பாறை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மழைக் காடுகளில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி, பாம்புகள், செந்நாய்கள் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இதே போல வால்பாறை பகுதியில் உள்ள மழைக் காடுகளில் இருவாச்சி பறவை உட்பட பல்வேறு வகையான அறியவகை பறவைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் காலசூழ்நிலை, தட்பவெப்பநிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு இடங்களிலிருந்து பறவைகள் வந்து செல்கின்றன. இவ்வாறு வெளியிடங்களிலிருந்து வரும் பறவைகளுக்கு வலசை போகும் பறவைகள் என்று சொல்வார்கள். இவ்வாறு தற்போது இமயமலைப் பகுதியில் பனிப்பொழிவும், குளிரும் கலந்த காலசூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் இமயமலைப் பகுதியிலிருந்து சாம்பல் வாலாட்டி குருவிகள் இதமான காலசூழ்நிலை காரணமாக வால்பாறைக்கு வரத் தொடங்கியுள்ளன. இது குறித்து சிங்கோனா அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் செல்வகணேஷ் கூறியதாவது:-

இடம் பெயர்ந்து வரும்

இந்த சாம்பல் வாலாட்டி குருவி ஆண்டு தோறும் ஆகஸ்டு் மாதத்தில் வால்பாறை பகுதிக்கு வந்துவிடும். ஆனால் ஆகஸ்டு் மாதத்தில் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் ஒரு வாரம் காலதாமதமாக செப்டம்பர் முதல்வாரத்தில் வால்பாறைக்கு வந்துள்ளன. இந்த சாம்பல் வாலாட்டி குருவி இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், இமயமலை அடிவாரப் பகுதியிலும் அதிகளவில் காணப்படுகிறது.அதே போல பாகிஸ்தான், கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷி்யா போன்ற நாடுகளுக்கும் காலசூழ்நிலையை பொறுத்து இடம் பெயர்ந்து வருகின்றன.

இந்த சாம்பல்வாலாட்டி குருவிகள் கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டுதோறும் வால்பாறைக்கு வந்து செல்வதை கண்காணித்து வருகிறேன். நமது வனப்பகுதிகள் செழுமையாகவும்,போதிய நீர்ஆதாரம்,மரங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாலும்,சாம்பல் வாலாட்டி குருவிகளுக்கு ஏற்ற காலசூழ்நிலை நிலவுவதாலும் ஆண்டுதோறும் இவைகள் இங்கு வருகின்றன.

இனப்பெருக்கம்

மேலும் இவற்றை யாரும் இந்த தொந்தரவு செய்யாததாலும் அவைகளுக்குத் தேவையான உணவுகள் இங்கு கிடைப்பதாலும் ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வந்து செல்கின்றன. தற்போது வால்பாறை பகுதி முழுவதும் இந்த குருவிகள் காணப்படுகின்றன.இந்த குருவிகள் ஏப்ரல் மாதத்தில் வால்பாறை பகுதியில் கோடைகாலம் தொடங்கியவுடன் மீண்டும் இமயமலைப் பகுதிக்கு சென்றுவிடும். அங்குதான் இந்த சாம்பல் வாலாட்டி குருவிகள் இனப்பெருக்கம் செய்யும். இந்த நிலையில் எங்களது பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு இந்த பறவை பார்த்தல் ஆர்வத்தை வளர்த்து வருதோடு பறவைகளை நேசிக்கவும், அவைகளை பாதுகாக்கும் பழக்கத்தையும் வளர்த்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இனிப்பு வழங்கினர்

இதற்கிடையில் சாம்பல் வாலாட்டி குருவிகள் சிங்கோனா அரசு உயர்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இதனால் மாணவ,மாணவிகளுக்கு பறவை பார்த்தலில் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மாணவ,மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதனால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்