ஆரே காலனியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு: பணியை தாமதப்படுத்தினால் மெட்ரோ ரெயில் கட்டணம் உயரும் மத்திய மந்திரி நிதின் கட்காரி எச்சரிக்கை

ஆரேகாலனியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பணியை தாமதப்படுத்தினால், மெட்ரோ ரெயிலை பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2019-09-10 23:45 GMT
மும்பை,

ஆரேகாலனியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பணியை தாமதப்படுத்தினால், மெட்ரோ ரெயிலை பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி எச்சரிக்கை விடுத்தார்.

மரங்களை வெட்ட முடிவு

மும்பையில் மெட்ரோ ரெயில் பணிமனைக்காக ஆரே காலனியில் 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட சமீபத்தில் மாநகராட்சி அனுமதி அளித்தது. ஆரே காலனி மும்பையின் நுரையீரலாக விளங்குவதாக கூறி அங்கு மரங்களை வெட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக போராட்டங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிக கட்டணம்

பாந்திரா-ஒர்லி கடல் வழி பாலத்தை ரூ.420 கோடி மதிப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த திட்டம் தாமதமாக செயல்படுத்தப்பட்டதால், அதற்கான செலவு ரூ.1,800 கோடியாக உயர்ந்தது. இதனால் அதிக சுங்க கட்டணத்தை செலுத்தி மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கும் தொடரக்கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், வளர்ச்சி பணிகளையும் ஒருங்கிணைந்து கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் அதிக வேலைவாய்ப்பு, விரைவான வளர்ச்சியை பெறுவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

மெட்ரோ ரெயில் பணிமனைக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தால், மெட்ரோ ரெயிலை பயன்படுத்த அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியது இருக்கும். மாற்று வழி இல்லாததால் தான் ஆரேகாலனியில் மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அங்கு அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்