தென்மாநிலங்களில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி ரூ.7½ கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் 3 பேர் கைது

மும்பையில் ரூ.7½ கோடி செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

Update: 2019-09-10 23:00 GMT
மும்பை,

மும்பையில் ரூ.7½ கோடி செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். அவர்கள் தென்மாநிலங்களில் இருந்து வெளிநாட்டுக்கு செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.

ரகசிய தகவல்

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வந்த வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக 2 டெம்போக்கள் சென்றதை கண்ட போலீசார் உடனடியாக அவற்றை வழிமறித்து நிறுத்தினர். மேலும் டெம்போக்களில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். இதில் செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் டெம்போக்களில் இருந்த 1,556 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த னர். இவற்றின் மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போக்களில் இருந்த 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அக்சர் இஸ்மாயில் சேக் (வயது49), அலி சாந்தாராம் சேக் (32), வாஜித் அப்பாஸ் அன்சாரி (32) என்பது தெரியவந்தது.

இவர்கள் தென் மாநிலங்களில் இருந்து செம்மரக்கட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்