ரூ.52½ கோடி போதைப்பொருள், பணம் பறிமுதல் 5 பேர் கைது

மும்பையில் ரூ.52½ கோடி போதைப்பொருள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-11 00:15 GMT
மும்பை,

மும்பையில் ரூ.52½ கோடி போதைப்பொருள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

ராய்காட் மாவட்டம் ரசாயனி பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தி கொண்டு 2 ஆசாமிகள் மும்பை பாண்டுப் பம்பிங் ஸ்டேசன் அருகே உள்ள பஸ்நிறுத்தத்திற்கு வரவுள்ளதாக விக்ரோலி போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது பஸ் நிறுத்தம் அருகே கையில் பார்சல்களுடன் 2 பேர் நின்றதை போலீசார் கண்டனர். உடனடியாக அவர்களை பிடித்து பார்சல்களை பிரித்து சோதனை நடத்தினர். இதில் 9 கிலோ எடையுள்ள எம்.டி. என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

ரூ.52½ கோடி..

விசாரணையில், இவர்கள் ராய்காட் மாவட்டம் ரசாயனி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து போதைப்பொருளை தயாரித்து மும்பை உள்பட பல்வேறு இடங்களுக்கு வினியோகித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் தெரிவித்த தகவலின் படி மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்தும் அதிகளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைதானவர்களிடம் இருந்து அதிகளவில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருளின் மொத்த மதிப்பு ரூ.52 கோடியே 64 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 8 மாதத்தில்...

இதையடுத்து போலீசார் ரசாயனி பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையை சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 125 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்