மர்ம நபர்களை துரத்தி சென்ற நாயை, விஷ ஊசி போட்டு கொன்றதால் பரபரப்பு ; துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை

திருப்பத்தூர் அருகே மர்ம நபர்களை துரத்தி சென்ற நாயை விஷ ஊசி போட்டு கொன்றனர்.

Update: 2019-09-11 23:00 GMT
திருப்பத்தூர்,

கந்திலி ஒன்றியம், லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து அதே ஊரில் உள்ள வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு, அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். இதனால் தற்போது தினமும் அப்பகுதி இளைஞர்கள் 15-க்கும் மேற்பட்டோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த பாத்திமா என்பவரின் வீட்டின் ஜன்னல் ஓரம் மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் பாத்திமா கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். மர்ம நபர்களை, பக்கத்து வீட்டை சேர்ந்த சரஸ்வதியின் நாய் குறைத்து கொண்டே துரத்தி சென்றது. அந்த நாயை அவர்கள் தாக்கி, விஷ ஊசி போட்டு கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறினார். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்