உயர்நீதிமன்ற உத்தரவின் படி கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும்

உயர்நீதிமன்ற உத்தரவின்படி எறையூர் அரசு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.28 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-09-11 21:30 GMT
பெரம்பலூர், 

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். துரைசாமி, செல்வராஜ், பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு, தங்களது வயல்களில் பயிரிட்ட கரும்புகளை வெட்டி வழங்கிய விவசாயிகளுக்கு 2015-16 மற்றும் 2016-17 ஆகிய நிதி ஆண்டுகளில் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.28 கோடியை உடனே வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிலுவைத்தொகை ரூ.28 கோடியை 15 சதவீத வட்டியுடன் வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எனவே, அந்த தீர்ப்பின்படி கரும்பு நிலுவைத்தொகை வட்டியுடன் உடனே கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இந்த தீர்ப்பை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்திட வேண்டும். கரும்பு நிலுவைத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முருகானந்தம் வரவேற்றார். முடிவில் பொன்னி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்