காண்டூர் கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறப்பு: திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 6 அடி உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

காண்டூர் கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 6அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-09-11 23:30 GMT
தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திமூர்த்திஅணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அது தவிர பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாகவும் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்பட்டு வரப்படுகிறது.

அதன் படி பி.ஏ.பி. பாசனதிட்டத்தின் மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புறகிராம மக்கள் பயன்பெறும் வகையில் பூலாங்கிணர், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் கணக்கம்பாளையம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மூலமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணைகளின் நீர்இருப்பும் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் பி.ஏ.பி. திட்டத்தின் உயிர்நாடியான திருமூர்த்திஅணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் அணையின் நீர்இருப்பு சரிந்து வந்ததுடன் குறைந்தபட்ச நீர்இருப்புக்கே தள்ளாடி வந்தது. இதன் காரணமாக 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத சூழல் நிலவி வந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 5 -ந் தேதி பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்திஅணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாயில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் பாறைகள் உருண்டு விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டதால் குறைந்தளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகளும் கால்வாய் பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். இதனால் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும் வினாடிக்கு 200 கனஅடிக்கு மிகாமல் திருமூர்த்திஅணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அணையின் நீர்இருப்பு உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதன்பின்னர் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவை அதிகாரிகள் படிப்படியாக உயர்த்தினார்கள். இதனால் காண்டூர் கால்வாய் மூலமாக அணைக்கு கடந்த 2 நாட்களாக வினாடிக்கு700 கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி 16.32 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 22.44 அடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 6 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையின் நீர்இருப்பு உயர்ந்த பின்பான 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் நிலங்களை உழுது பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்