தடையை மீறி பரிசலில் சென்ற போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் - 3 பேர் மீட்பு

ஒகேனக்கல்லில் தடையை மீறி பரிசலில் சென்ற போது காவிரி ஆற்றில் பெண் அடித்து செல்லப்பட்டார். 3 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2019-09-11 23:00 GMT
பென்னாகரம்,

புதுச்சேரியை சேர்ந்தவர் மனோ. இவருடைய மனைவி அஞ்சலாட்சி (வயது 51). இவர்களுடைய மகள் மோசிகா (27). இவர்கள் பிரான்ஸ் நாட்டில் தற்போது வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் விடுமுறையில் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். இதையொட்டி அவர்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் இரவு காரில் சுற்றுலா வந்தனர். அந்த காரை டிரைவர் கந்தன் என்பவர் ஓட்டி வந்தார். தொடர்ந்து அவர்கள் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் இரவு தங்கினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மனோ, அஞ்சலாட்சி, மோசிகா, கந்தன் ஆகியோர் ஒகேனக்கல்லை சுற்றி பார்த்து ரசித்தனர். பின்னர் அவர்கள் பரிசல் சவாரி செய்ய ஆசைப்பட்டனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் சவாரிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலையை சேர்ந்த மனோகரன் (37) என்பவர் அவர்கள் 4 பேரையும் பரிசலில் ஏற்றிக் கொண்டு காவிரி ஆற்றில் சவாரி சென்றார். ஒகேனக்கல் அருகே தமிழக எல்லையான நீலகிரிபிளேட் என்ற இடத்தில் சென்ற போது திடீரென அவர்கள் சென்ற பரிசல் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில், பரிசலில் இருந்த 5 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். மனோ, மோசிகா, கந்தன் ஆகியோர் ஆற்றில் உள்ள செடிகளை இறுக பிடித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பரிசல் ஓட்டி மனோகரன் அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் அஞ்சலாட்சி மட்டும் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தடையை மீறி பரிசலை இயக்கிய மனோகரனை போலீசார் கைது செய்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதல் அஞ்சலாட்சியை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்