பந்தலூர் அருகே, ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் கதி என்ன?

பந்தலூர் அருகே ஓணம் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சென்ற வாலிபர் கால்இடறி ஆற்றில் விழுந்தார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-09-11 22:15 GMT
பந்தலூர்,

பந்தலூர் அருகே புளியம்பாறை புளியம்வயல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). இவர் நேற்றுமுன்தினம் தோட்டலிருந்திருந்த வாழைதார்களை விற்பனைக்காக கூடலூர் கொண்டு சென்றார். பின்னர் அங்குள்ள கடையில் விற்பனை செய்து விட்டு ஓணம் பண்டிகைக்கு தேவையான பொருட்களை கூடலூர் பஜாரில் உள்ள கடைகளில் வாங்கினார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மது, ஆனந்த் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இவர்கள் இரவில் கூடலூர்-பந்தலூர் சாலையில் உள்ள இரும்புபாலம் என்ற இடத்தில் குண்டமூலா ஆற்றை கடந்து தங்களது கிராமத்துக்கு செல்ல வேண்டும். இந்த ஆற்றை கடக்க மரத்திலான பாலம் உள்ளது. இந்த மரப்பாலத்தில் நடந்தபடி ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆற்றை கடந்து உள்ளனர். பந்தலூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடியது. ஆற்றை கடக்கும் போது ராஜேஷ் கால்இடறி மரப்பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தார்.

விழுந்த வேகத்தில் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இரவு நேரம் என்பதால் அவரை தேட முடியவில்லை. இதையடுத்து அவரது நண்பர்கள் கூடலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஸ், பிரேம்குமார், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ேதடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணி மேற்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து நேற்று காலை முதல் இரவு வரை அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) தேடும் பணி நடக்கிறது. இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்