விவசாயிகளுக்கு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் என்பது தவறான தகவல் - மயிலாடுதுறையில், எச்.ராஜா பேட்டி

விவசாயிகளுக்கு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் என்று தவறான தகவல் பரப்பப்படுவதாக மயிலாடுதுறையில், எச்.ராஜா கூறினார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மயிலாடுதுறையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-09-11 22:30 GMT
மயிலாடுதுறை, 

விவசாயிகளுக்கு, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்போவதாக ஒரு பொய் செய்தியை பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இதுபோன்று சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புபவர்களை சமூக விரோதிகளாக கருதி அவர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்று விவசாயிகளை கேட்டு கொள்கிறேன். 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் ஓய்வூதிய திட்டத்தை நாளை(அதாவது இன்று) பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.

வங்கிகள் மூலமாக முத்ரா வங்கிக்கடன் திட்டம், வட்டி மானியத்தில் வீடு கட்டும் திட்டம், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு சாலைகள் போட ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக மத்திய அரசு விவசாயத்தில் மூலதனமிடுவதற்கு இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருக்கிறார். பொதுமக்களிடம் இருந்த பணம் முழுவதும் வங்கிக்கு வந்ததால், தற்போது பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிர முகர் சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக பொருளாதார மந்தநிலை, பொருளாதார வீழ்ச்சி என்று செய்தி பரப்புகின்றனர். தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் யார் என்று பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா ஆகியோர் முடிவு செய்வார்கள். அவர்கள் யாரை கைகாட்டினாலும் ஒவ்வொரு பா.ஜனதா கட்சி தொண்டரும் கட்டுப்பாட்டோடு அதை ஏற்று கொள்வார். இதில் விவாதத்திற்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம், நகர தலைவர் மோடிகண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்