தூத்துக்குடி அருகே, வீட்டில் நகைகளை திருடிய பணிப்பெண் கைது

தூத்துக்குடி அருகே வீட்டில் நகைகளை திருடிவிட்டு, மர்ம நபர்கள் கத்தி முனையில் நகைகளை திருடி சென்றதாக கூறி நாடகமாடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-11 21:30 GMT
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாமுவேல் ஜெயசீலன் (வயது 51). இவர் கீதாநகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் குருவானவராக உள்ளார். இவர் வீட்டில் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி லட்சுமி (42) கடந்த சில மாதங்களாக வீட்டில் தங்கி பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சாமுவேல் ஜெயசீலன் குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்று இருந்தார். இரவு சாமுவேல் ஜெயசீலனுக்கு தொடர்பு கொண்ட லட்சுமி, அய்யா உடனடியாக வீட்டுக்கு வாருங்கள். இங்கு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டுக்குள் புகுந்து என்னை கத்தி முனையில் மிரட்டி, வீட்டின் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாமுவேல் ஜெயசீலன் வீட்டுக்கு விரைந்து சென்றார். தொடர்ந்து அவர் முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். முத்தையாபுரம் போலீசார் லட்சுமியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி நகைகளை திருடிவிட்டு, மர்ம நபர்கள் திருடி சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர், அதே வீட்டுக்குள் பதுக்கி வைத்து இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்