நெல்லை அருகே, ஓட்டல் தொழிலாளி கொலையில் பரபரப்பு தகவல்கள் - 2 பேருக்கு வலைவீச்சு

நெல்லை அருகே ஓட்டல் தொழிலாளி கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-11 22:30 GMT
மானூர், 

நெல்லை அருகே மானூர் பக்கமுள்ள தெற்குபட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 65). இவர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை அவர் மும்பையில் இருந்து தெற்குபட்டிக்கு வந்தார். இரவில் வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1.30 மணிக்கு மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து, பேச்சிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு அந்த பகுதியில் இருந்த மற்றொரு வீட்டின் முன்பு நின்றது. அந்த வீடு யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, தெற்குப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சொந்தமான 5½ ஏக்கர் நிலம் மாறாந்தையில் உள்ளது. அந்த நிலத்தை பேச்சிமுத்துவின் மகன் இசக்கிப்பாண்டி (31) தனது தந்தை பெயரை பேச்சிமுத்து என்ற முருகன் என்று மாற்றி, பத்திரப்பதிவு செய்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

மேலும், மோப்ப நாய் நின்ற வீடு தங்கராஜூக்கு சொந்தமானது என்பதும், அந்த வீட்டில் பகலில் ஆட்கள் இருந்ததும், இரவில் ஆட்கள் யாரும் இல்லை என்பதும் தெரியவந்தது. எனவே, இந்த கொலையில் தங்கராஜ் மற்றும் அவருடைய உறவினர் சுடலையாண்டி ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மானூர் போலீசார், தங்கராஜ், சுடலையாண்டி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்