டாஸ்மாக் ஊழியரை கொன்று கொள்ளை: மலை அடிவாரத்தில் பணத்தை புதைத்து வைத்த வாலிபர்;வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

டாஸ்மாக் ஊழியரை கொன்று பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதான வாலிபர் மலை அடிவாரத்தில் பணத்தை புதைத்து வைத்து இருந்தார். இது தொடர்பான வீடியோ வாட்ஸ்-அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-12 23:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பேட்டப்பனூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இதில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரி நகரைச் சேர்ந்த ராஜா (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி இரவு இவர் டாஸ்மாக் கடையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் இந்த கொலையில் ஈடுபட்டது வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அரவிந்தன் (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் திருட்டுத்தனமாக அந்த பகுதியில் மது விற்று வந்ததும், கடந்த மாதம் 14-ந் தேதி விற்பனையாளர் ராஜா கடையை பூட்டும் நேரத்தில் அரவிந்தன் அங்கு சென்றுள்ளார். மறுநாள் (15-ந் தேதி) சுதந்திர தினத்தில் மதுக்கடைகள் கிடையாது என்பதால் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்க திட்டமிட்ட அரவிந்தன் மதுபாட்டில்களை கேட்டார். அப்போது ராஜா கடைக்குள் சென்ற நேரத்தில் அரவிந்தன் கத்தியால் அவரை குத்திக்கொன்று கடையில் வசூலாகி இருந்த ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கைதான அரவிந்தனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அவர் மலை அடிவாரத்தில் பணத்தை குழி தோண்டி புதைத்து வைத்திருந்ததை கைப்பற்றினர். இந்த நிலையில் அரவிந்தனை போலீசார் அழைத்து செல்வது, குழியில் பதுக்கி வைத்திருந்த பணத்தை எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று வாட்ஸ்-அப்பில் வெளியானது. இதில் பணம் கத்தை, கத்தையாக கிடந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்