வெள்ள நிவாரண பணிகளுக்கு இன்னும் நிதி ஒதுக்காததால் மத்திய அரசு மீது எடியூரப்பா கடும் அதிருப்தி

வெள்ள நிவாரண பணிகளுக்கு இன்னும் நிதி ஒதுக்காததால் மத்திய அரசு மீது எடியூரப்பா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-09-12 22:30 GMT
பெங்களூரு, 

வெள்ள நிவாரண பணிகளுக்கு இன்னும் நிதி ஒதுக்காததால் மத்திய அரசு மீது எடியூரப்பா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதி வழங்கவில்லை

கர்நாடகத்தில் குறிப்பாக வடகர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் தென் கர்நாடகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் சுமார் 90 பேர் மரணம் அடைந்தனர். லட்சக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. கிருஷ்ணா ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.

இந்த வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கர்நாடகம் வந்து நேரில் பார்வையிட்டனர். அதன் பிறகு மத்திய குழு வந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டு சென்றது. ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருப்பதை, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன.

காலம் தாழ்த்துவது சரியல்ல

எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து வரும் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய அரசு விரைவில் நிதி உதவியை வழங்கும் என்று கூறி வருகிறார். ஆனால் இதுவரை நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எடியூரப்பா திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பா மத்திய அரசு மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, “கர்நாடகத்தில் வெள்ள சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை, இவ்வாறு செய்தால் நிவாரண பணிகளை எப்படி மேற்கொள்வது, இதன் காரணமாக வட கர்நாடகத்தில் தேர்தலின் போது பா.ஜனதாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் பா.ஜனதா தான் வலிமையாக உள்ளது. இவ்வாறு இருந்தும், மத்திய அரசு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவது சரியல்ல“ என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியதாக கூறப்படு கிறது.

மேலும் செய்திகள்