நாளை நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 3,705 வழக்குகள் விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 705 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் கூறினார்.

Update: 2019-09-12 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 705 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் நேற்று காலை கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதிமன்றம்

ஒவ்வொரு 3 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடக்கிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் தங்களது வழக்குகளை சமாதானமாக, சுமுகமாக பேசி தீர்வு காணலாம்.

பெரிய வழக்குகளை தவிர்த்து சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகளான காசோலை வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மின்சாரம், குடிநீர் வரி சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நல வழக்குகள் ஆகியவற்றை பேசி தீர்த்துக் கொள்ளலாம். மேலும் குற்றவியல் வழக்குகளில் சிறிய வழக்குகளை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யாமலேயே இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம். மோட்டார் வாகன விபத்து வழக்கு, நிலம் கையகப்படுத்திய வழக்கு மற்றும் வருவாய் சார்ந்த பட்டா, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகளுக்கும் தீர்வு காணலாம்.

மேல்முறையீடு கிடையாது

நாளை மக்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும். தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு நகலும் வழங்கப்படும். வழக்காடிகள் கோர்ட்டில் கட்டணம் செலுத்தி இருந்தால், அந்த கட்டணம் முழுவதுமாக திருப்பி தரப்படும். இந்த வழக்குகளில் தீர்வு காணப்பட்டால் மேல்முறையீடு கிடையாது.

மக்கள் நீதிமன்றம் என்றால், கோர்ட்டு நடைமுறைதான் இருக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். இது அதுபோன்று இல்லாமல், இருதரப்பினரையும் அருகருகே அமரச்செய்து, அவர்களின் பிரச்சினைகளை பேசி தீர்வு காணப்படும்.

3,705 வழக்குகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 29 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 13 ஆயிரம் வழக்குகள் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணக்கூடிய வழக்குகள் என்று இனம் காணப்பட்டு உள்ளது. இதில் சுமார் 3 ஆயிரத்து 705 வழக்குகள் நாளை நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி கோர்ட்டில் 1,562 வழக்குகளும், கோவில்பட்டி கோர்ட்டில் 1,015 வழக்குகளும், திருச்செந்தூர் கோர்ட்டில் 464 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 262 வழக்குகளும், சாத்தான்குளம் கோர்ட்டில் 209 வழக்குகளும், விளாத்திகுளம் கோர்ட்டில் 193 வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இந்த வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகைக்கான வழக்குகளில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ரூ.8 கோடி வரையிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. ஜூலை மாதத்தில் 2 ஆயிரத்து 188 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 92 லட்சம் வரை பைசல் செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்