ஜாமீனில் வெளியே சென்றவருடன் சேர்ந்து மது அருந்திய மதுரை மத்திய சிறை அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே சென்றவருடன் சேர்ந்து நட்சத்திர ஓட்டலில் மது அருந்திய மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மற்றும் 2 தலைமை சிறை காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-09-12 22:15 GMT
மதுரை,

மதுரையில் ஒரு வழக்கு தொடர்பாக முத்துக்கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் அவருடன் சேர்ந்து மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் முனியாண்டி, தலைமை சிறை காவலர்கள் மணி, மூர்த்தி ஆகியோர் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் மது அருந்தியதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கும் தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து விசாரணை நடத்தினார்.

அதில் உதவி ஜெயிலர் மற்றும் தலைமை சிறை காவலர்கள் 2 பேரும், ஜாமீனில் வெளியே சென்றவருடன் சேர்ந்து ஓட்டலில் மது அருந்தியது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே உதவி ஜெயிலர் முனியாண்டி, தலைமை சிறை காவலர்கள் மணி, மூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை சூப்பிரண்டு ஊர்மிளா நேற்று உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் சிறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்