அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி, குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குளித்தலை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-12 22:45 GMT
குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை ஒன்றிய செயலாளர் பிரபாகர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர்கள் இளங்கோவன், முத்துச்செல்வன், சத்தியப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும், மருத்துவமனை சீர்கேடுகளை களையவேண்டும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும், இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவரை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்.

நோயாளிகளை தரக்குறைவாக பேசும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், மருத்துவர்கள் அவர்களின் பணி நேரம் முழுவதும் பணியாற்றுவதை உறுதிப்படுத்துதல், இங்குள்ள ஸ்கேன் மையத்தை தினமும் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை மருத்துவப் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மேலும் செய்திகள்