பெற்றோருக்கு பெண் பிடிக்காததால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்றது - வேலூரில் பரபரப்பு

வேலூரில் நேற்று காலை தாலி கட்டும் நேரத்தில், மணமகனின் பெற்றோருக்கு பெண் பிடிக்காததால் திருமணம் நின்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-12 22:45 GMT
வேலூர்,

அணைக்கட்டு தாலுகா திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்கும், வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் பேசி முடிவு செய்தனர். அதன்படி, அவர்களுக்கு நேற்று காலை வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனால் நேற்று காலை செல்வ விநாயகர் கோவிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்த நேரத்தில் மணமகனின் பெற்றோரும், உறவினர்கள் சிலரும் தங்களுக்கு பெண் பிடிக்கவில்லை, அதனால் தாலி கட்டக்கூடாது என்று மணமகன் ரவியிடம் கூறி உள்ளனர்.

ஆனால் ரவி தனக்கு பெண் பிடித்திருப்பதாகவும், அந்த பெண்ணையே திருமணம் செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே மணமகன் ரவி அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். மணமகன் மாயமானதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மணமகன் ரவி நேரடியாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து விட்டதாகவும், அந்த பெண்ணையே தான் திருமணம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ரவியின் பெற்றோர், பெண்ணுக்கு திக்குவாய் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, மணமகள் பிடிக்கவில்லை என்று கூறி உள்ளனர். ஆனால் ரவி அந்த பெண்ணையே திருமணம் செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பதிவு திருமணம் செய்து கொள்ளுமாறு ரவியிடம் கூறிய போலீசார், திருமணத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என்று அவருடைய உறவினர்களிடம் கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்